தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர்.
20 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நாடு முழுவதும் 357 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், கனமழையால் 1,09,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 399 பேரும், மேற்கு வங்கத்தில் 277 பேரும் மத்திய பிரதேசத்தில் 182 பேரும் பீகாரில் 166 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.