புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அகில உலக யோகா திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. 1993ஆம் ஆண்டில் முதன்முறையாக யோகா திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால் இதில் பங்கேற்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
யோகா திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முருங்கப்பாக்கம், புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் யோகா செயல்விளக்கம், யோகாசனம் குறித்த உரை அரங்கம், யோகாசன போட்டிகள், யோகா தெரபி, இலவச யோகா பயிற்சி, யோகா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று புதுச்சேரி கடற்கரைச் சாலை நடைபெற்ற 26ஆவது அகில உலக யோகா திருவிழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து விழாவினை தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும், யோகா கலைஞர்களின் யோகாசனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் விழாவிற்கு வந்திருந்தனர். வரும் ஏழாம் தேதிவரை நடைபெறும் யோகா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.