நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலைமை என்ன என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வரலாறு காணாத சோகம் என்பது தேமுதிகவுக்கு மிக சரியாக பொருந்தும். தமிழக மக்களுக்கு திசைகாட்டியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. தற்போது திசை தெரியாமல் நிற்கின்றது . அரசியலில் எம்ஜிஆர், சிவாஜி போல அதிமுக, திமுக என இரு பெரும் கட்சி கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு புயலாக நுழைந்த கட்சி தேமுதிக. மதுரையில் வைத்து புதுக் கட்சி கண்ட விஜயகாந்த் ஒரு பெரும் சக்தியாக உருவாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 2006 சட்டசபை தேர்தலில் முதல்முறையாக தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக கிடைத்தார். அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 27.64 லட்சம் ஓட்டுகள் ஆகும்.
முதல் முறையாக இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெற்றதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்டு 39 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. ஆனால் அப்போது அவர் பெற்ற வாக்குகள் 31.26 லட்சம். இதற்கு மேல் இந்த கட்சியை விட்டு வைத்தால் ஆபத்து என்று திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு தேமுதிக கூட்டணிக்கு இழுக்க முயற்சி செய்தன. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி கிடைத்தது. விஜயகாந்த் தனித்து போட்டியிட விருப்பம் கொண்டிருந்த நிலையில் அதிமுகவின் பக்கம் போகலாம் என்று கட்சியினர் கூற அரை மனதோடு சம்மதித்தார்.
அதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அவர் கூட்டணி கட்சியில் நுழைந்ததும் 41 சீட்டுகள் மட்டும் கிடைத்தது. அதில் தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. சட்டசபைக்குள் எதிர்க்கட்சியாக நுழைந்த குறுகிய காலத்தில் அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட விஜயகாந்த் அதற்குப்பின் அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் சரிவிலேயே இருந்தது. 2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவதில் என்ற பெரும் குழப்பமான ஏற்பாட்டில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து 104 சட்டசபை போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டும் கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2 லட்சம் வாக்குகளே கிடைத்தன. மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாக இது வந்து சேர்ந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுத்தான் தனது கட்சிக்கான அடித்தளத்தை போட்டார் விஜயகாந்த். அதேபோல இந்த தேர்தலில் இழந்த பலத்தை மீண்டும் பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.