காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, மக்களுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றின் காரணமாக 27 கோடி மக்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா.வின் உலக உணவு திட்டம் காலநிலை மாற்றம், கொரோனா தொற்று தாக்கம், உணவு பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக உணவு பொருட்களின் விலை உலகம் முழுவதும் 33.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் காலநிலை மாற்றம், மோதல்கள், சமீபத்திய உணவு விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக உணவுப் பாதுகாப்பின்மை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சுமார் 27 கோடி மக்கள் கொரோனா தொற்று, காலநிலை மாற்றம், மக்களுக்கு இடையிலான மோதல் ஆகியவற்றின் காரணமாக உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. உலக உணவு உணவு திட்டம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா. உணவு நிறுவனத்தின் விலை குறியீட்டில் ஜூன் மாதத்தில் உலக உணவு விலைகள் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளில் 33.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில் சமையல் எண்ணெய் 440 மடங்கு விலை உயர்ந்துள்ளதாகவும், லெபனான் நாட்டில் கோதுமை மாவு 219 மடங்கு விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4.1 கோடி மக்கள் 43 நாடுகளில் உணவு இல்லாமல் பஞ்சத்தில் உள்ளதாகவும் ஏற்கனவே கிட்டத்தட்ட நான்கு நாடுகளில் 6 லட்சம் பேர் உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொரோனா அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளவில் 11 பேர் வீதம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பட்டினியால் உயிரிழப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போதிய உணவு கிடைக்காமல் வறுமை காரணமாக உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் துன்பத்தை அனுபவித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளது. கடந்த வருடம் உலக பணக்காரர்களின் செல்வாக்கு 41 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடான், ஏமன், மடகாஸ்கர், எத்தியோப்பியா, புர்கினா பாசோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் பஞ்சம் காரணமாக 584,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.