275 சவரன் நகை கொடுத்தும் வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்து விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார்
மதுரையை சேர்ந்த கவிநிலா என்ற பெண்ணிற்கும் சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் வருடம் பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். இத்தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்றும் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து திருமணத்தின் போது வரதட்சணையாக 230 சவரன் நகை கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதோடு சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது கூடுதலாக 45 சவரன் நகையும் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கணவர் துளசிராம் மீண்டும் வரதட்சனை கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கவிநிலா தனது பெற்றோர் வீட்டிற்கு போய் விட்டார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் சில மாதத்தில் 45 லட்ச ரூபாயை தருவதாகக் கூறி மீண்டும் கவிநிலாவை அவரது கணவர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென கவிநிலாவின் பெற்றோருக்கு அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் சென்று பார்த்தபோது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் கவிநிலாவின் சடலம் இருந்துள்ளது.
ஆனால் அவரது கழுத்திலோ அல்லது வீட்டில் தூக்கு மாட்டியதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை. இதனால் பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு தனது மகளை வரதட்சணை கேட்டு அவர்கள் கொலை செய்துவிட்டதாக குற்றம் சுமத்தினார். அதோடு காவல் நிலையத்திலும் மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிந்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.