கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது.
சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
ஈரான் நாட்டில் மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரானில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த விவகாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இந்திய தூதரகத்தின் மூலம் ஈரான் நாட்டின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.பின்னர் ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் அனைவருக்கும் நெகட்டிவ் என்று கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வந்தது.
அதை தொடர்ந்து, நேற்று அந்த நாட்டின் மகான் ஏர்லைன்ஸ் (mahan airlines) விமானம் 277 இந்தியர்களுடன் அங்கிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது.
இந்நிலையில் ஈரானிலிருந்து 277 இந்தியர்கள் மகான் ஏர் விமானம் மூலம் இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 14 நாள் அல்லது 28 நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.