ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட வாலிபர் வசந்தாவிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, தன்னிடம் இருந்த வேறு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதில் பணம் வரவில்லை என நம்ப வைத்து வசந்தாவிடம் வேறொரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.
இதனை நம்பிய வசந்தா அங்கிருந்து சென்றதும் அந்த வாலிபர் வசந்தாவின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதில் இருந்த 32 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து வசந்தாவின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்தா உடனடியாக இதுகுறித்து கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் வசந்தாவிடம் உதவி செய்வது போல் நடித்து பணத்தை ஏமாற்றியது மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த சரவணகுமார்(27) என்பது தெரியவந்துள்ளது. இதைனையடுத்து காவல்துறையினர் உடனடியாக பாலமேடுக்கு சென்று சரவணகுமாரை கைது செய்து ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடமிருந்த 8000 ரூபாய் பணம், 28 ஏடிஎம் கார்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணன் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியான நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.