சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார்.
இவரை தொடர்ந்து தற்போது பட்டினப்பாக்கத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிமாறன் என்பவர் கடந்த 11ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தனது குடும்பத்துடன் சூளைமேட்டில் வசித்து வந்த இவரது புகைப்படத்தை அவரது வீட்டின் முன் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் டிஜிபி திரிபாதி,
கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுவரை சென்னை போலீஸில் 1155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாக்கியது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு 1183 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 491 பேர் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.