வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது.
திமுக தொடர்ந்த வழக்கு:
திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி திமுகவின் மூத்த வழங்கறிஞர் நீதிபதி சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பான வழக்கை 19ம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்குவது தொடர்பான தகவல்களை மத்தியஅரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.