கிரேஸி மோகன் வசனத்தில் கமல்ஹாசன் நான்கு கேரக்டர்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு வயது 29. ஒரு கமல் – கிரேஸி மோகன் இருந்தாலே சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்காமல் விட்டதில்லை. இந்தப் படத்தில் நான்கு கமல் மற்றும் அவருடன் குஷ்பு, ரூபினி, ஊர்வசி, நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். படத்தில் காமெடியன் என்று தனியாக யாரும் கிடையாது. ஆனால், எல்லா கேரக்டர்களும் சிரிக்க வைத்திருப்பார்கள்.
காட்சிக்கு காட்சி மட்டுமில்லாமல், பாடலிலும் இதனைத் தொடர்ந்திருப்பார்கள். காணாமல் போன நான்கு குழந்தைகள், பெற்றோர்கள் சேரும் க்ளிஸேவான கதைக்கு, தனது நகைச்சுவையால் தூக்கலான சுவை கொடுத்திருப்பார் படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் ‘சுந்தரி நீயும்’ என்ற பாடல் முழுக்க முழுக்க வரும் ஸ்லோ மோஷன் வீடியோவில் கமல் – ஊர்வசியின் பெர்ஃபெக்ட் லிப் சிங்க், எப்படி படமாக்கினார்கள் என்பது, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் வளர்ச்சி குறைவான கமல் கெட்அப் போல் ரகசியமாகவே இன்றளவும் இருக்கிறது.
4 கேரக்டர்களில் உருவத்தில் மட்டுமல்ல, குரலிலும் வெரைட்டி காட்டியிருப்பார் கமல். குறிப்பாக காமேஸ்வரன் என்ற பாலக்காட்டு ஐயர் கேரக்டரில் டெல்லி கணேஷுடன் அடிக்கும் லூட்டிகள் செம என்டர்டெயின்மென்ட்.
மைக்கேல் மதன காமராஜன் படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தமிழில் வெளியான காமெடி படங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தப் படத்தைப் போல் ஒவ்வொரு ஃப்ரேமிலும் காமெடி வைத்து, இனி படம் எடுப்பது என்பது திரை இயக்குநர்களுக்கு மிகப் பெரிய சவால் தான்.