இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை தடுக்க தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG (2 டியோக்ஸி டி குளுக்கோஸ்) பவுடர் மருந்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2DGபவுடர் மருந்தை ஒரு முறை தண்ணீருடன் கலந்து அருந்தினால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும். உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. மத்திய அரசின் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் டென்னிஸ் லேபரட்டரிஸ் இணைந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கான விலை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.