திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின் கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகப்படும்படி தாடியுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து உள்ளே வேகமாக சென்று அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், எனது தந்தை தனக்கு சிறுவயதாக இருக்கும் சமயத்திலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நான் பெரியவன் ஆனதும் எனது தாத்தா சொத்தை அவரிடம் முறைப்படி கேட்டேன்.
ஆனால் அவரோ இரண்டாவது மனைவியின் உறவினருடன் சேர்ந்து என்னை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் என் மீது பொய் புகார் அளித்து விட்டார். இதனால் அடைந்த மனவேதனை காரணமாக தான் இவ்வாறு செய்ய முற்பட்டேன். தயவுசெய்து நீங்கள் தான் எனது தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்ற சட்ட முறைப்படி எனக்கு வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீக்குளிக்க முயன்றவர் திருச்சி மத்திய உருக்காளையில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும், அவரது மனைவி வேலூர் ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருவதும், இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.