பிரிட்டனில் ஒரு பெண் குப்பைத்தொட்டியில் போட வைத்திருந்த பையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் Swinton என்ற நகரத்தைச் சேர்ந்த 82 வயது பெண் நேற்று காலையில் தன் வீட்டின் பின்புறம் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தியுள்ளார். எனவே அங்கு கிடந்த பொருட்களை வீதியில் இருக்கும் குப்பைத்தொட்டியின் அருகில் கொண்டு போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கொட்டிய குப்பையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்திய வெடிகுண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
காவல்துறையினர் உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்று வெடிகுண்டு நிபுணர்களையும் தீயணைப்பு படையினரையும் வரவழைத்துள்ளனர். இதனால், அப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியிலிருந்த வீடுகளில் உள்ள மக்கள் சிலரை காவல்துறையினர் வெளியேற்றினர்.
மீதமுள்ள மக்கள், தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்து கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பின்பு, அந்த வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்து, மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்றார்கள். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த வீட்டில் இதற்கு முன் தங்கியிருந்த நபர், அந்த வெடிகுண்டை தன் வீட்டின் பின்புறம் வைத்திருந்துள்ளார் என்று தெரியவந்திருக்கிறது. அதன்பின்பு, அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.