பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பார்க்கலாம்.
மே – 5 : லாடாக் எல்லையின் பாங்காங் ட்சோ பகுதியில்
இந்திய-சீனப் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர்.
மே – 10 : சிக்கிம் மாநிலத்த்தின் முகுந்தங் பள்ளத்தாக்கு அருகே மீண்டும் நடைபெற்ற மோதலில் இரு தரப்பிலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
மே – 21 : எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தார்புக் – ஷியோக் – தல்லதத் பெக் ஒல்டி வரை இந்தியா சாலை அமைந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
மே – 24 : பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வான் பள்ளத்தாக்கின் சில பகுதிகள் மற்றும் ஹாட் ஸ்பிரிங்கிசில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவம் முகாமிட்டது.
மே – 25 : சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் எல்லையில் படைகளைக் குவித்தது. இரு நாடுகளிடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
ஜூன் – 6 : லெப்டினல் ஜெனரல்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
ஜூன் – 15 : கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜூன் – 21 : இதையடுத்து சீன எல்லையில் அவசர காலங்களில் ஆயுதங்களை பயன்படுத்த ராணுவத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசு, முப்படைகளும் உடனடியாக தேவைப்படும் ஆயுதங்களை கொள்முதல் செய்ய தலா 500 கோடி ரூபாய் ஒதுக்கியது.
ஜூன் – 25 : பதற்றத்தைத் தவிர்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கின. எனினும் மற்றொரு புறம் இரு நாடுகளும் போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டன.
ஜூன் – 27 : இந்தியாவும், ஜப்பானும் இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஜூன் – 29 : பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை விதித்தது.
ஜூலை – 1 : இந்தியாவை மிரட்டும் வகையில் போரூர் அதிநவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வீடியோவை சீனா வெளியிட்டது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
ஜூலை – 3 : இந்த பதற்றமான சூழலுக்கு நடுவே பிரதமர் மோடி லடாக் எல்லையில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜூலை – 5 : சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மூலம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில் சீன ராணுவம் எல்லையில் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்துக்கு படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் நீடித்து வரும் பதற்றம் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்