தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது.
இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து, கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தைக் கருத்தில் கொண்டு அணையில் எந்த நேரத்திலும் நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வைகை ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.