குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குடிநீர் உரிமம் பெறாத சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடலூர் அருகே 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் , குன்றத்தூரில் 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் பின்னர் அந்த 132 சுத்திகரிப்பு நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்கும் உரிமத்தை வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.
தொடர்ந்த மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்ட அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் இதனால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.