கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணியின் முயற்சியால் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வாரம் தோறும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அதே பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடக்கிறது.
இந்நிலையில் நோயாளிகள் கணினியின் முன்பு உள்ள கேமராவில் முகத்தை காட்டி டாக்டர் பார்த்திபனுடன் உரையாடுகிறார்கள். அவர் நோயாளிகளுக்கு என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு அதற்கான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்குகிறார். இந்த பணிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரோஜா கூறியதாவது. நான் பவானி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு இந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தோட்ட வேலை செய்து வந்தேன். இந்நிலையில் சென்டர் 4 சோசியல் கம்ப்யூட்டிங் நிறுவனத்தினர் மூலம் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த பணி குறித்து மருத்துவர் பார்த்திபன் எனக்கு 3 நாட்கள் பயிற்சி அளித்தார். அதுமட்டுமின்றி, சிறு காயங்களுக்கு கட்டு போடுவது, புண்களுக்கு மருந்து போடுவது உள்ளிட்ட பயிற்சியும் அளித்துள்ளார். எனவே நான் இவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். மேலும் எனக்கு படித்த செவிலியர்கள் முறையாக பயிற்சி அளித்தால் எங்கள் கிராம மக்களுக்கு என்னால் இன்னும் சிறந்த சேவை செய்ய முடியும் என கூறியுள்ளார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.