3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் உரிய நேரத்தில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கொடைக்கானல் நுழைவு வாயில் சோதனைச்சாவடியில் இரண்டு பாதைகள் இருக்கின்றன. இதில் ஒரு பாதை வழியாக செல்வதற்கு மட்டுமே வாகனங்களை அனுமதிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இரண்டு பாதைகள் வழியாகவும் வாகனங்கள் செல்ல அனுமதி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.