வங்காளதேசத்தில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
வங்காளதேச விடுதலைப்போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த பயிற்சியை முடிக்காமல் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்நிலையில் சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்க முயற்சி செய்த கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரில் கலந்துகொண்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர். இதனை அடுத்து இவர்கள் கொலை, இனப்படுகொலை, கற்பழிப்பு, சித்ரவதை உள்ளிட்ட குற்றங்களை வங்காளதேச விடுதலைப்போரின்போது, பர்லேகா பகுதியில் அரங்கேற்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் 3 பேரின் மீதும் டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்து 2016-ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கான தீர்ப்பு இப்போதுதான் வந்துள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி முகமது ஷாகினுர் இஸ்லாம் தலைமையிலான 3 உறுப்பினர் அடங்கிய அமர்வில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் குற்றங்களும் சந்தேகத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மரண தண்டனையும் விதித்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பும் அளித்தனர். இவர்களில் முகமது அப்துல் மாட்டின் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.