முதியவரிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதவத்தூர் பகுதியில் நிர்மல் குமார்(67) என்பவர் வசித்து வருகிறார். இவர் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நிர்மல் குமாரின் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது செல்போன் எண்ணுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. அதனை பெறுவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள ஈமெயில் மற்றும் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளவும் என இருந்தது.
இதனால் நிர்மல் குமார் உடனடியாக அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் பரிசுத்தொகை வெளிநாட்டு பணம் என்பதால் இந்தியாவிற்குள் கொண்டுவர உலக வங்கி, ரிசர்வ் வங்கி ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு 6 லட்ச ரூபாய் செலவாகும் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய நிர்மல் குமார் அந்த நபர் கூறிய 3 வங்கி கணக்குகளுக்கு 6 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். இதனை அடுத்து பேங்க் ஆப் இங்கிலாந்து என்ற பெயரில் நிர்மல் குமாருக்கு ஒரு ஏ.டி.எம் கார்டு வந்தது.
பின்னர் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்த கும்பல் ஏ.டி.எம் கார்டு மூலம் பரிசு தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தொகையை விடுவிக்க வேண்டும் என்றால் 7,00,000 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய நிர்மல் குமார் நண்பர் ஒருவரிடம் 7 லட்சம் ரூபாயை கடனாக கேட்டுள்ளார். அந்த நபர் நிர்மல் குமார் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை அறிந்து ஆலோசனைகளை கூறி பணத்தை செலுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
இதனை அடுத்து நிர்மல் குமார் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மோசடி கும்பல் நிர்மல் குமரை ஏமாற்றி 6 லட்ச ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.