Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், கிராம ஊராட்சி ஆணையாளர் சிவசங்கர் மற்றும் பர்கூர் ஊராட்சி செயலாளர் குமார் ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு  தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பொது குழாய் மூலம் எங்களுக்கு தண்ணீர் வருகின்றது. இந்த தண்ணீரை நாங்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உட்பட மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் கடந்த மூன்று தினங்களாக எங்கள் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை.

இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் மேலும் தாமரைக்கரை பகுதியில் அமைந்துள்ள வீரபத்திர சாமி திருக்கோவில் திருவிழா மூன்று தினங்கள் நடைபெற இருக்கிறது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் ஊருக்கு வந்துள்ளதால் தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. ஆதலால் திருவிழா தினத்தன்று லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

அதற்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உங்கள் கோரிக்கை நிறைவேற்றபடும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அந்தப் பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |