சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் காந்தி நகரில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான காசி விஸ்வநாதன் என்பவர் தான் புதிதாக தொடங்கவிருக்கும் தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி மதன் அவரது நண்பர்களான சாய் கணேஷ், சக்தி ஆகிய 3 பேரும் இணைந்து காசி விஸ்வநாதனிடம் தொழிலில் முதலீடு செய்வதற்காக 15 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். பல மாதங்கள் ஆகியும் காசி விஸ்வநாதன் சொன்னபடி லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு காசி விஸ்வநாதன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதனும் அவரது நண்பர்களும் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மாத தவணையில் ஒரு வீடு மற்றும் கார் வாங்கி விஸ்வநாதன் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.