மேம்பாலத்தின் மீது பைக் மோதி சேல்ஸ்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் காரணமாக மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு 10 இடங்களில் புதிதாக வேகத்தடைகள் கட்டப்பட்டது. அதன் பிறகு விபத்து தடுப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் போன்றவைகளும் வைக்கப்பட்டது. கடந்த 9-ம் தேதி பாலம் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் தாமஸ் வீதி பகுதியைச் சேர்ந்த சேல்ஸ்மேனாக வேலை பார்க்கும் ஆனந்தகுமார் என்பவர் வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ரெயின்போ காலனி அருகே சென்றபோது மேம்பாலத்தின் மீது ஏறினார். அப்போது வேகத் தடையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறிய போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் சேல்ஸ்மேன் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீஸ் கமிஷனர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து பாலத்தில் விபத்து நடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் இருப்பதால், விபத்தை தடுப்பதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.