தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு வந்து விடப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த கரடியை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சோர்வடைந்து காணப்பட்ட கரடி நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது. பின்னர் வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் 8 வயதான பெண் கரடி நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் கரடியின் உடல் வனப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது.