சாலையில் நடமாடிக் கொண்டிருந்த மாடு முட்டி 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளில் மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்த மாடுகளை பிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து பராமரிப்பு நிலையங்களில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பாரதி நகர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மாடு திடீரென அங்கு நின்ற நபர்களை துரத்தியுள்ளது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் சீனிவாசன் என்பவரை மாடு பலமாக தாக்கியுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மாட்டை பிடித்துள்ளனர். அதன்பிறகு அந்த மாட்டை கும்பகோணம் காவல் நிலையத்திற்கு முன்பாக கட்டிப்போட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த மாடு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மாட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.