3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்..
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே 1:1 என சமநிலை வகித்தது..
இந்த நிலையில் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 105 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்கா அணியில் வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அதாவது முதல் போட்டியில் டெம்பா பவுமா கேப்டனாக அணியை வழிநடத்தினார். அதன் பின் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் விளையாடாமல் இருந்த நிலையில், கேசவ் மஹாராஜ் கேப்டனாக செயல்பட்டார்..
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டெம்பா பவுமாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேபோல கேசவ் மஹாராஜ் உடல்நல குறைவு காரணமாக விளையாடவில்லை. இதனால் டேவிட் மில்லர் 3ஆவது போட்டியில் கேப்டனாக செயல்பட்டு அணியை வழி நடத்தினார்… இந்நிலையில் 3 போட்டிகளிலுமே 3 கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு தென்னாப்பிரிக்க அணி கேப்டனுடன் டாஸ் போடும்போது ஷிகர் தவான் இப்படி தான் நிற்பார் என்று குறிப்பிட்டு, ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒருவர் ஒவ்வொருத்தராக மற்றி மாற்றி அழைத்து தன்னுடன் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். சிரிப்பது போல இமோஜி வைத்து பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
Shikhar Dhawan at the toss with a different SA captain every game 😄 #INDvSA pic.twitter.com/28iE883xSW
— Wasim Jaffer (@WasimJaffer14) October 11, 2022