மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். கடந்த 10-ஆம் தேதி முதல் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திம்பம் மலை பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 3 மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இங்கு போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.