மூன்று அரசு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காத நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு அடுத்து கர்நாடக மருத்துவமனைகளின் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம், என தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாத நிலையில் கர்ப்பிணியை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூன்று மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கே சி மருத்துவமனை வெளியே ஆட்டோவில் சென்ற போதே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில் துரதிர்ஸ்டவசமாக குழந்தை உயிர் இழந்து விட்டது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அனுமதி கொடுக்க மறுத்த மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்திருக்கிறார். மருத்துமனையில் சிகிச்சை மறுக்கப்படுவதால் கொரோனா தொற்று இல்லாமலேயே பலர் உயிரிழந்து வருகிறார்கள். அனுமதி மறுக்கப்படும் அனைத்து மருத்துவமனைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.