கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூக்குழி கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(28) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோதினிக்கும், பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய பவிஷி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வினோதினி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் பாலாஜிற்கு பழக்கம் ஏற்பட்டதால் வினோதினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வினோதினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கணவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மர்மமான முறையில் வினோதினி இறந்து கிடப்பதாக பாலாஜி தனது மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சான்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் வரதராஜன் புகார் அளித்துள்ளார். அதில் இரவு 8 மணிக்கு வினோதினி செல்போனில் நன்றாக பேசினார். பின்னர் 16 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. முதலில் நெஞ்சுவலியால் இறந்ததாகவும், பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர். எனது மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. எனவே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.