செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் மற்றும் மடிக்கணினி பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது பிலால் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். அதன்பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் கடையில் செல்போன் மற்றும் மடிக்கணினியை திருடியது பதிவாகியிருந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.