கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமான அமுதா வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ஆம் தேதி அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அசகளத்தூரில் இருக்கும் தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த உரிமையாளர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு பெண் சிசு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்றெடுக்க விருப்பம் இல்லாமல் கருக்கலைப்பு செய்யுமாறு அமுதா கூறியதால் மருந்தக உரிமையாளர் கரு கலைப்பதற்கான மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்டு நிராமணியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அமுதாவுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அமுதாவை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அமுதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநத்தத்தில் இருக்கும் மருந்தகத்தில் கரு கலைப்பு செய்த பெண் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.