சட்ட விரோதமாக சாராயம் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் கல்படை வனப்பகுதியிலிருந்து சாராயத்தை காரில் கடத்தி வருவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழிமறித்தை பார்த்த காரில் வந்தவர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தங்களது மோட்டார் சைக்கிளில் அந்த காரை துரத்தி சென்று தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் லாரி டியூப்களில் 210 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் காரில் வந்தவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர்கள் தாழ்மதூர் கிராமத்தில் வசிக்கும் இளையராஜா, ராமர், பார்த்திபன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.