டிக்கெட் எடுக்குமாறு கூறியதற்கு கண்டக்டரை மூன்று சிறுவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகரப் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருணாகரன் பாரி முனையில் இருந்து மூலகடை நோக்கி சென்ற தடம் எண் 64-சி கொண்ட பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து எம்.கே.பி நகரில் இருக்கும் பாரத் பேருந்து நிறுத்தத்தில் மூன்று சிறுவர்கள் பேருந்தில் ஏறினர். அதன்பிறகு கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியதற்கு அந்த மூன்று சிறுவர்களும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த கருணாகரன் மூன்று சிறுவர்களையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார். அப்போது மூன்று சிறுவர்களும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருணாகரன் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூன்று சிறுவர்களையும் பிடித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்து விட்டனர்.