விராட், ரோகித், தோனி என மூவரும் தனித்துவமான பாணியை கொண்டவர்கள் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன்சி மற்றும் தோனியின் எதிர்காலம் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பேட்டியில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது, “கேப்டன்சி என பார்த்தால் விராட், தோனி, ரோஹித் என மூன்று பேருக்கும் தனித்துவமான குணம் உண்டு. மூவரும் தனி பாணியை கடைப்பிடிப்பார்கள்.
விராட் கோலியை பொருத்தவரை என்ன வேண்டும் என்பதை முதலிலேயே தெளிவாக கூறிவிடுவார். ரோகித் சர்மா வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நினைப்பவர். ஒவ்வொரு வீரரின் நிலையிலும் இருந்து சிந்திப்பவர். தோனியை பொருத்தவரை கேப்டன் கூல் என்று சொல்லலாம். அவரது மனதில் என்ன உள்ளது என்பதை அவர் சொல்லாமல் எவராலும் அதனை கண்டு பிடிக்க முடியாது. உலக கோப்பை தொடருக்கு பின்னர் சில காலம் தோனி கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என நினைத்தார்.
அதன் காரணமாகவே ரிஷப் பந்தை நாங்கள் அணியில் தேர்வு செய்தோம். இப்போது கே.எல்.ராகுல் அவரது இடத்திற்கு வந்துள்ளார். அவர் நியூசிலாந்து தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் நிச்சயமாக தோனி களம் இறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். தோனியின் பழைய ஆட்டத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் சூழலில் ஐபிஎல் நடக்குமா என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது என்றார்