ஆறு கட்டங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகள் திறந்து நடத்துவதற்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது
பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பான தற்காலிக அறிக்கை ஒன்றை என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ளது.
அதில் ஆறு கட்டங்களாக பள்ளிகளைத் திறந்து வாரத்தில் மூன்று நாட்கள் நடந்த பரிந்துரைத்துள்ளது. முதலில் 11, 12ஆம் வகுப்புகளுக்கும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9, 10ம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்து இரண்டு வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று வாரம் கழித்து 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்துள்ளது.
1 மாதத்திற்கு பின்பு ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கும் 5 வாரங்களுக்குப் பிறகு மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு ஒவ்வொரு மாணவரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். வகுப்பறையில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம். மாணவர்களுக்கு இடையில் வகுப்பறையில் தனிமனித இடைவெளி இருக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை ஆராய்ச்சி குழு பரிந்துரைத்துள்ளது.