வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய பொழுது வங்கி ஏடிஎம் இயந்திரம் வேறு இடத்திற்கு இடம்மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வங்கியை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ள முள்வேலியில் துளையிட்டு வழி ஏற்படுத்தி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வங்கியில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தடையங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணம் நகைகள் திருடு போனதா என்பது குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.