இந்தியா, கோவாக்சின் தடுப்பூசிக்கு பின்பு ZyCoV-D என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்துள்ளது.
இந்தியாவின் சைடஸ் காடிலா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசியை, அவசர கால உபயோகத்திற்கு அனுமதி அளிப்பதற்கு இன்று விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு பின்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி என்ற பெருமையை பெற்றுவிடும்.
மேலும் நாட்டில் 5-வது தடுப்பூசியாக இது அங்கீகரிக்கப்படவுள்ளது. தற்போது வரை கோவாக்சின், கோவிஷீல்ட், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி, மாடர்னா போன்ற தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ZyCoV-D தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டால் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாக இருக்கும்.
இந்நிலையில் சுமார் 28,000 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் இந்த தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தடுப்பூசிக்கான ஆராய்ச்சியில் 66.6% பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டிஎன்ஏ தடுப்பூசி, மூன்று டோஸ்கள் கொண்டிருக்கிறது. முதல் டோஸ் செலுத்திய 28-வது நாள் இரண்டாவது டோஸும், 56 ஆவது நாளில் மூன்றாவது டோஸும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.