மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பேரையூர் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ராமர் என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி, வாசிமலை ஆகிய 2 பேரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவர்களது வீடுகளில் எந்தவித மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.