கன்னியாகுமரியில் ‘தங்கப் புதையல் வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை விசாரணைக்கு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அப்பகுதியில் வசித்து வந்தவர் ஜெர்லின். இவர் அதே பகுதியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெர்லினுக்கு திடீரென தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனால் வசதி வாய்ப்பு வந்ததாகவும் ஊரில் பலர் பேசிக் கொண்டனர். இதனை நம்பி ஜெகன் என்பவர் ஜெர்லினை 6 பேரின் உதவியுடன் கடத்தினார். பின் அவர்களிடமிருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெர்லினை விசாரித்த பொழுது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
அதில் கடத்தல் வேலையில் மூன்று காவல் ஆய்வாளர்களுக்கும் தொடர்புண்டு என்று அவர் புகார் அளிக்க காவல்துறையினரே அதிர்ந்து போயினர். பின் கடத்தல் ஈடுபட்ட மூன்று காவல் ஆய்வாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மனித மாநில மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் ஜெயச்சந்திரன் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு நடத்த ஒப்புக் கொண்டார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக நடைபெற உள்ள விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய மூவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளார். மேலும் விசாரணை தொடர்பான சம்மனை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.