நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”.
தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார்.
இதனை அடுத்து அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ”நான் காதல் கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். இந்நிலையில் நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். மேலும் இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. இந்த திரைப்படம் பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது. அது இந்த திரைப்படத்தில் நிறைவேறியுள்ளது. எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகின்றது. “ஓ மை கடவுளேே” திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.