மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி ரேகா அய்யப்பனிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அய்யப்பன் 3 மகன்களுக்கும் விஷத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி வீட்டில் இருந்த ஹேர் டையை எடுத்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி ரேகாவை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து ரேகா அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் 3 குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேகா ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.