கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசிக்கும் 7 பேர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பள்ளம் என்ற பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் நோக்கி வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த சமயம் தடுப்பு சுவர் மீது மோதி எதிரே வந்து கொண்டிருந்த இன்ஜினியர்கள் பயணித்த கார் மீது அந்த மினி லாரி மோதி விட்டது. இந்த விபத்தில் லாரி மோதியதில் அங்கிருந்த சிக்னல் கம்பி முறிந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் ராவ் என்ற தொழிலாளி தலை மீது விழுந்து விட்டது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இருவர் உயிரிழந்துவிட்டனர். மேலும் மீதமுள்ள ஐந்து பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரூபேஷின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.