தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரியதோடு, 6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது பலர் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டுக்கொண்டே வருகிறதே தவிர தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது வரை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதால் அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.