இருடியம் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்பரசை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் தங்களிடம் இருடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் எனவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அன்பரசு அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் இருடியத்தை வழங்காமல் 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பரசு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் ராஜா, சரவணன், மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் இணைந்து அன்பரசை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ராஜாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு இருடியங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தப்பியோடிய சரவணன் மற்றும் மஞ்சுநாத் வலை வீசி தேடி வருகின்றனர்.