விளையாடுவதற்காக சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஷாந்த், கோகுல், சுனில் குமார் என்ற மூன்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த மூன்று சிறுவர்களும் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களைத் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது பெரிய ஏரி அருகே அந்த மூன்று சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்ததாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிறுவர்களின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பெற்றோர்கள் ஏரிக்கரை பகுதியில் சிறுவர்களை தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்காததால் சிட்லபாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிட்லபாக்கம் காவல்துறையினர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் சிறுவர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மூன்று சிறுவர்களின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் சடலங்களை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் நெஞ்சை உலுக்கியது. மேலும் இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.