கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை மனு மூலம் கலெக்டருக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாக வருவாய் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது.
அப்போது வருவாய் ஆட்சியரின் முன்பு அங்கு வந்திருந்த முதியவர் ஒருவர் காலை 11 மணி அளவில் திடீரென கையிலிருந்த பாட்டிலில் உள்ள மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியில் கூட்டிச் சென்று அவர் மீது தண்ணீர் ஊற்றிய பின் முதியவரிடம் விசாரிக்கையில்,
எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு பேரில் கடைசி மகன் மட்டுமே என்னை இத்தனை காலம் வேலை பார்த்து வந்த வருமானத்தின் மூலம் நன்கு பார்த்துக் கொண்டான். எனக்கு 75 வயதாகிறது. இந்நிலையில் எனது கடைசி மகன் வெளிநாட்டுக்குச் சென்ற பின்பும், 4 மகன்களும் என்னை கவனிக்க மாட்டேன் என்று கூறிவிட , கடைசி மகனிடம் கூறியபோது,
நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி மாதம் மாதம் எனக்கு பணம் அனுப்புவான். அதில் எனது செலவுபோக சேர்த்து வைத்து வீடு கட்டினேன். அந்த வீட்டை அவன் பெயருக்கு எழுதி வைத்தேன். இதை அறிந்த மூன்று மகன்களும் அதில் பங்கு கேட்டு என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.
அப்போது இது முழுக்க முழுக்க என் மகனின் பணம் இதில் உங்களுக்கு தருவதில் ஒன்றுமில்லை என்று கூறியதும் என்னை அடித்துத் துரத்தி விட்டதோடு எனது கடைசி மகனின் குடும்பத்தையும் அடித்துத் துரத்தினர். இதையடுத்து நாங்கள் ரயில் நிலையத்தின் பின் வசித்து வருகிறோம். அங்கும் வந்து அவர்கள் அடித்து துன்புறுத்தினார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால்தான் மனமுடைந்து இவ்வாறு செய்தேன் மாவட்ட ஆட்சியர் தான் எங்களுக்கு அந்த வீட்டை மீட்டு தந்து மூன்று மகன்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மூன்று மகன்கள் அடித்து துரத்தியதால் முதியவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.