திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெளியகரம் கிராமத்தில் சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருக்கின்றார். இந்நிலையில் சுதர்சன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் ராமதாஸ் நாயுடு என்ற விவசாயி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு கேமரா போன்றவற்றை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தநிலையில் பள்ளிப்பட்டு நகர் செல்லும் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கண்ணகி நகர் பகுதியில் வசித்து வரும் அண்ணாமலை, பாண்டியன் மற்றும் ராஜா என்பதும், இவர்கள் மூவரும் இணைந்து திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனைஅடுத்து மூன்று பேரையும் பள்ளிப்பட்டு காவல் துறையினர் கைது செய்து அவர்கள் திருடிய அனைத்து பொருட்களையும் கைப்பற்றிச் சிறையில் அடைத்து விட்டனர்.