விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக குழி மூடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. பின் சரியாக கையாளாத குழியில் மழைநீர் முழுவதும் தேங்கி காணப்பட்ட நிலையில் மணிகண்டனின் மூன்று வயது பேரன் ருத்ரன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது தவறி மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவனது மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனது குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். அதில் குழியை சரியாக மூடாமல் அலட்சியமாக விட்டதால் சிறுவனின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதற்கு காரணமான ஒப்பந்ததாரர் மீதும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டபட்டிருந்தது.