தெலுங்கானா மாநிலத்தில் போச்சபள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று வயதாகும் சாய்வர்தன் என்ற சிறுவன் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். நேற்று தண்ணீருக்காக மூன்று கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றிலும் தண்ணீர் வராததால் திறந்த நிலையில் வைத்துள்ளனர். அதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மீட்பு படையினர் விரைந்து வந்து அந்த சிறுவனை மீட்க போராடி வருகின்றனர் சிறுவன் விழுந்த ஆழ்துளைக்குள் ஆக்சிஜன் செலுத்தும் முயற்சி நடைபெற்று வந்தது. மேலும் பக்கவாட்டில் 25 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் சிறுவனை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் தெலுங்கானாவில் அதேபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.