மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது.
மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது மட்டுமல்லாமல் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டது, ஊழல் என்று 12க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியது. எனினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ஆங் சான் சூகிக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.